வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெற ரூ.129.59 கோடி வைப்புநிதி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 129 கோடியே 59 இலட்சம் ரூபாய்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதுல்ய மிஸ்ராவிடம் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (29.11.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெறுவதற்கு ஏதுவாக வைப்பு நிதியினை ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி, மொத்தம் 129 கோடியே 59 இலட்சம் ரூபாய்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் அதுல்ய மிஸ்ராவிடம் வழங்கினார்.
போதிய வருமானம் இல்லாத திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது நடைபெறுவதற்கு ஏதுவாக பெரிய திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி உதவி செய்யும் விதமாக, ஆலய மேம்பாட்டு நிதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிதியின் கீழ் 5 கோடி ரூபாய் வைப்புநிதி ஏற்படுத்தப்பட்டு, அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டித்தொகையிலிருந்து திருக்கோயில்களுக்கு ஒருகால பூஜை நடைபெறுவதற்கு நிதி உதவி வழங்கிட வழிவகை செய்யப்பட்டது.
தற்போது, ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு வைப்பு நிதியாக ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி, மொத்தம் 129 கோடியே 59 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக வழங்கினார்கள்.
இதன்மூலம் திருக்கோயில்களுக்கு கூடுதலாக வட்டித்தொகை கிடைக்கப்பெறுவதால், பூஜை பொருட்களை தேவையான அளவு வாங்கி பூஜை செய்வதில் நிறைவான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, ஒருகால பூஜை மேற்கொள்ளும் திருக்கோயில்களைச் சேர்ந்த அர்ச்சர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகள் ஆகியோர் கூடுதலாக நிதி வழங்கியமைக்காக முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu