சாதி குறித்த தகவல் எதையும் பள்ளிக் கல்வித் துறை சேகரிக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து நாளிதழ் செய்தி வெளியானது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விபரப் பதிவேட்டில் அவர்களின் ஜாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தவறாக குறிப்படப்பட்டுள்ளது, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே ஒவ்வோர் ஆண்டும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை வகுத்தபின் அது குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்புடைய பள்ளிகள் தகவல் தெரிவிக்கவேண்டும். அதனடிப்படையிலேயே பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான நிதி வழங்கப்படும். 2020-21 கல்வியாண்டில் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் வகுக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல் அனுப்பாத பள்ளிகளை விரைந்து அனுப்பவேண்டுமெனக் கோரி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்தச் சுற்ற்றிக்கையில், குழந்தைகள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களா , பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களா, பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களா அல்லது சிறுபான்மையினரா அல்லது முற்பட்ட வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தையின் சாதியைக் (Caste) கேட்பதற்கும், அக்குழந்தை சார்ந்த வகுப்பைக் (Communal Category - SCIST/BC/MBC...) கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் என்ன வகுப்பைச் சார்ந்தவர்கள் என்கிற தகவல் ஏற்கனவே இருக்கிறது. அந்த விவரங்களின் அடிப்படையில்தான், அவர் பட்டியல் பழங்குடியினரா, பிற்படுத்தப்பட்டவரா, முற்படுத்தப்பட்டவரா என்பது முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்ளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இது வெகுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதை மிக எளிதாக பதிவேற்றம் செய்துவிட முடியும். இதன் மூலம் பணிச்சுமை குறைகிறது. ஒரு மாணவர் பள்ளியில் சேரும்போது ஒரு முறை பதிவு செய்தால் போதும். இவர்கள் சார்ந்த வகுப்புதான் செயலியில் பதிவாகுமே தவிர மாணவர்களின் சாதி எங்குமே சேமிக்கப்படுவதில்லை. விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கான பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தத் தகவல் கேட்கப்படுகிறது. பின்னாளில் அவர்கள் இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறவும் இந்த அடிப்படைத் தகவல் தேவைப்படுகிறது.
ஒரு மாணவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான் தமிழக அரசுக்குத் தேவையே தவிர அந்த மாணவரின் சாதி அல்ல. சமூக நீதியின் அடிப்படையில் இயங்கும் தமிழக அரசு தன் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறது. அந்த சுற்றிக்கையில் சாதி கேட்கப்படாதபோது கேட்டதாக ஒரு பொய்ச் செய்தியை உலவவிடுவது உண்மைக்குப் புறம்பானது. சாதிக்கும் வகுப்புக்கும் வேறுபாடு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கிறது அச்செய்தி தமிழக பள்ளிகளில் சாதியப் பாகுபாடு காட்டப்படுகிறது என்கிற தகவல் தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை விளிம்பு நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கென கேட்கப்படும் விவரங்களை திரித்து மாணவர்களின் சாதியை பள்ளிக் கல்வித் துறை கேட்டது போன்றதொரு தோற்றத்தைத் தர முயல்வது அநீதியானதும் முற்றிலும் பொய்யானதும் தமிழக அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு முரணானதுமாகும் என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu