10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு
சென்னையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளன.
இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ம.க.இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. பாரதீய ஜனதா கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தனர்.
இந்த கூட்டத்தின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
இடஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூநீதி கொள்கைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. சாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை கொடுப்பதுதான் சமூக நீதி. இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்க்க கூடாது என ஜவஹர்லால் நேரு காலத்தில் பேசப்பட்டது. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு தடுக்காது. தி.மு.க. அரசின் பொரும்பாலான திட்டங்கள் ஏழை மக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான். ஏழை மக்களின் வறுமையை போக்க மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு ஆதரிக்கும். மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா. முன்னேறிய சமூகத்தை சேர்ந்த ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அல்ல. இந்த தீர்ப்பினால் எதிர்காலத்தில் சமூக நீதி அழிந்து விடும்.
இவ்வாறு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்பேசினார்.
கூட்டம் முடிந்த பின்னர் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல் அமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால் அ.தி.மு.க. பாரதீய ஜனதா கட்சிகள் மட்டும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க. கலந்து கொள்ளாததற்கு காரணம் அந்த கட்சியில் இருவருக்கு இடையே உள்ள பிரச்சினை காரணமா? அல்லது அவர்கள் கொள்கை ரீதியாக பாரதீய ஜனதாவுடன் செல்லப்போகிறார்களா? என தெரியவில்லை. சமூக நீதி கொள்களை எம்ஜிஆர் ஜெயலலிதா கடந்த காலங்களில் கட்டிகாத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த இந்த கூட்டத்தை புறக்கணித்து இருப்பது சமூக நீதிக்கு எதிரானதாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தாது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற எல்லா கட்சியினருமே உயர் சாதியினருக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். அப்போது தமிழக அரசும் அந்த மனுவுடன் தன்னை இணைத்து கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பினை அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்ற அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தி.மு.க. எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu