கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
கள்ளச்சாரயம் குடித்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 90 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார். ஆனாலும் விடுதலையாகி வந்து மீண்டும் சாராயம் காய்ச்சுவதையே தொழிலாக செய்து வந்துள்ளார்.
டாஸ்மாக் கடையில் மதுபானம் விலை அதிகம் என்பதால் பல மதுப்பிரியர்கள் வழக்கமாக இவரிடமே மது வாங்கி குடித்து வந்துள்ளனர். கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை தோடர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில்தான் நேற்று அந்த பகுதி மக்கள் குடித்த கள்ளச்சாராயத்தால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் ஏராளமானோர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 33 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மரில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள உள்ளவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சாவு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் தலைமறைவாகி இருந்த நிலையில், போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கோவிந்தராஜின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அவரது வீட்டில் இருந்த 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு விழுப்புரம் மண்டல தடயவியல் மையத்தில் சோதனை செய்யப்பட்டதில் சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக ரஜக் சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பனி அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி துயர சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் அமைச்சர்கள் முத்துசாமி, எவ வேலு, பொன்முடி உள்ளிட்டவர்களும், காவல்துறை டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அவர் விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu