மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல்
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துள்ளது.
நேற்று முன்தினம் (08.12.2022) தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல், நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (09.12.2022) காலை 8.30 மணி அளவில் புயலாக வலு குறைந்து காரைக்காலுக்கு 180 கி.மீ. கிழக்கு வட கிழக்கே மற்றும் சென்னைக்கு 260 கி .மீ. தென்-தென்கிழக்கே நிலைகொண்டிருந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் புதுவை- தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரத்திற்கு அருகே, நள்ளிரவு இன்று (10.12.2022) அதிகாலை கரையை கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, நேற்றிரவு சுமார் 9.45 மணி அளவில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கியது. முதலில் வெளிப்புறப் பகுதி பின்னர் மையப்பகுதி அதன் பின்னர் வால் பகுதி என 3 கட்டங்களாக மாண்டஸ் புயல் கரையை கடந்தது.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாண்டஸ் புயல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்தது. சுமார் 5 மணி நேரமாக இந்த புயல் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசியது.
இதனைத்தொடர்ந்து புயல் கரையை கடந்து முடிந்துள்ள நிலையில் புயல் படியாக வலுவிழக்கும் என்றும், முதலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கடந்ததன் காரணமாக சென்னையில் 300க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்களை அகற்றும் பணியில் முன்களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ள கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுடன், மண்டல அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவினரும் நகர் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu