குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அறுபத்தி ஒன்பது படுக்கை வசதிகள் கொண்ட நிலையில் அவற்றில் 10 படுக்கை மட்டுமே ஆக்சிஜன் வசதி கொண்டதாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா தீவிர நோய்த்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரூபாய் 45 லட்சம் மதிப்பில் 50 எல் பி எம் திறன்கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டது.
இதை இன்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
கொரானா மூன்றாவது அலை தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் விதத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை ஒருபகுதியாக முதல்வரின் அறிவுறுத்தல் படி அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆலோசனையின் கீழ் இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. இது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu