திருப்பி அனுப்பப்பட்ட தரமற்ற ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரிகள்
கோப்புப்படம்
காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான வட்ட செயல்முறை கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் இருந்து காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட 168-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு ரேஷன் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.
கடந்த 2 மாதங்களாக இந்த சேமிப்புக் கிடங்கிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான பச்சரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு பச்சரிசி மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பச்சரிசி தரமற்று இருப்பதால், பொதுமக்கள் அதை வாங்கிச் செல்ல மறுத்து வருகின்றனா். இதனால், ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் அதிகளவில் பச்சரிசி மூட்டைகள் தேங்கி, வீணாகி வருவதாக விற்பனையாளா்கள் புகார் தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில், சிதம்பரம் அருகே மணலூரில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் காட்டுமன்னார்கோவில் செயல்முறை கிடங்குக்கு பச்சரிசி மூட்டைகள் இறக்குவதற்காக சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.
இந்த மூட்டைகளை ஏற்றிச் செல்ல வந்த நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளா்கள், ஏற்கெனவே பச்சரிசி மூட்டைகள் கடைகளில் தேங்கி வீணாகி வருவதால், தரமற்ற பச்சரிசி மூட்டைகளை கடைகளுக்கு ஏற்றிச் செல்ல மாட்டோம் எனக் கூறி புறக்கணித்தனா். இதனால், விற்பனையாளா்களுக்கும், சேமிப்புக் கிடங்கு அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த விசிக மாவட்டச் செயலா் மணவாளன், சேமிப்புக் கிடங்குக்குச் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, லாரியில் இருந்த தரமாற்ற பச்சரிசி மூட்டைகள் மீண்டும் மணலூா் சேமிப்புக் கிடங்குக்கே திருப்பி அனுப்பப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu