நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைபித்தன் பிறந்த தினமின்று
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட விருத்தாசலம். தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.
கூரிய சமூக விமர்சனமும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகிறது. தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது இவரது படைப்புகள். புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார்.தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார்.தாசில்தாராக பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார்.
அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லைக் கல்லூரியில் பி.ஏ பட்டம்பெற்றார். 1932 ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.இவரது முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்" காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது.
1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகளும் பிரசுரமாகத் துவங்கின. இந்த காலக் கட்டதில் அவர் சென்னைக்குக் குடிப்பெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும், சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன.
சென்னையில் இவர் சில ஆண்டுகள் தினமணியிலும்,பின்பு தினசரியிலும் பணிபுரிந்தார்.இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார்.ஜெமினி நிறுவனத்தின் "அவ்வை" மற்றும் "காமவல்லி" படங்களில் பணிப் புரிந்தார்.பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கினார். எம்.கே.டி பாகவதரின் "ராஜமுக்தி" திரைப் படத்திற்காக புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி 5 மே 1948-இல் காலமானார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu