சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டி மனு
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேலும் 15-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19-ந்தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20-ந்தேதியும் நடைபெறும் என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது, என எழுத்து பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் 10 நாட்கள் திருவிழாவும், மற்றும் மூலவர் நடராஜர் பெருமான் தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. இவ்விழாக்களில் காலம் காலமாக பக்தர்கள், பொதுமக்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இவ்விழாக்களில் பக்தர்கள் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இது தங்களுக்கு வருத்தம் தரக்கூடியதாகவும் தங்கள் உரிமை மறுக்கப்படுவதும் ஆகும். மேலும் தமிழகத்தில் உள்ள பிற கோயில் திருவிழாக்கள் பிற நிகழ்வுகளுக்கும் பொதுமக்கள் கூடுவதற்கும் பிற மத நிகழ்வுகளுக்கும் வழிபாடுகளுக்கும் மக்கள் கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்படவில்லை.
ஆனால் தில்லை நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஒரு தலைபட்சமாக தெரிகிறது. எனவே சிதம்பரம் நடராஜர்கோயில் ஆருத்ரா தரிசனம், தேர் திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கியும் திருவிழா எந்த தடையும் இல்லாமல் நடத்தி தரும்படியும் கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu