சிதம்பரம் அருகே தைல மரத்தோப்பில் திருநங்கை அடித்துக் கொலை

சிதம்பரம் அருகே தைல மரத்தோப்பில் திருநங்கை அடித்துக் கொலை
X
கொலை செய்யப்பட்ட திருநங்கை பனிமலர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தைலமரத் தோப்பில் கொலை செய்யப்பட்ட திருநங்கையின் உடலை போலீசார் கைப்பற்றினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மணலூர் பகுதியில் வசித்து வந்தவர் பனிமலர் (31). திருநங்கையான இவர் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர். கடந்த பல ஆண்டுகளாக சிதம்பரத்தை அடுத்த மணலூர் கிராமத்தில் தங்கி வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருநங்கை பனிமலர் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூரில் உள்ள தைல மரத்தோப்பில் சடலமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது திருநங்கை பனிமலர் முகத்தில் காயங்களுடன், காதில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இறந்த திருநங்கையுடன் மணலூர் கிராமத்தில் ஒன்றாக தங்கி இருந்த ரூபா (34) என்ற திருநங்கை, கொலைச் சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையாகி கிடந்த திருநங்கை பனிமலர் அந்த இடத்திற்கு சென்றது ஏன்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநங்கை பனிமலர் இறந்தது பற்றிய தகவல் அறிந்த சக திருநங்கைகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே திருநங்கை கொலையானது குறித்து புகார் அளித்த ரூபா என்ற திருநங்கை செய்தியாளர்களிடம் கூறுகையில்,சம்பவம் நடந்த நேற்று இரவு கொலை செய்யப்பட்ட திருநங்கை பணிமலர் தனக்கு செல்போனில் பேசியதாகவும், தன்னை சிலர் தாக்கி விட்டார்கள். அதனால் பேச முடியவில்லை. உடனே வா எனக் கூறியதாகவும், பின்னர் சம்பவ இடத்திற்கு சென்றபோது திருநங்கை பனிமலர் இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தார். மேலும் இறந்த திருநங்கை பனிமலர் கடைசியாக பேசிய ஆடியோவையும் வெளியிட்டார்.

செய்தியாளரிடம் மற்ற திருநங்கைகள் கூறுகையில், திருநங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. கடலூர் மாவட்டத்தில் முதன்முறையாக இதுபோன்ற சம்பவத்தில் ஒரு திருநங்கை கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கைகளின் பாதுகாப்பை தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்