சிதம்பரம் அருகே மதிய உணவில் அழுகிய முட்டை: 27 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 27 குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வேலைங்கிபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அத்தியாநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். அவர்களுக்கு பள்ளியில் வெள்ளிக்கிழமை முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை நாள்பட்ட அழுகிய முட்டைகள் என்பது தெரியவந்துள்ளது.
அதனை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தைகளின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். மேலும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவர்களை சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 27 குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த புதுச்சத்திரம் காவல் நிலைய போலீசார் இதுதொடர்பாக விசாரணை செய்தனர்.
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலட்சியத்தால், இவ்வாறு நடைபெற்றுள்ளதாக கூறும் பெற்றோர்கள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu