குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
தொல். திருமாவளவன்
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் களமிறங்குகின்றனர்.
இந்த நிலையில் திருமாவளவன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அவரிடம் 2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரத்து 903 ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்துகளும், 28 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புக்கு அசையா சொத்துகளும் இருக்கின்றன. அவரின் தாய்க்கு ரூ.7,95,500 அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 83 ஆயிரத்து 969 ரூபாய் வாகனக்கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம்?
திருமாவளவனிடம் உள்ள 4 வங்கிக் கணக்குகளில், அண்ணா சாலை இந்தியன் வங்கி கணக்கில் இருப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கணக்கில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 595 ரூபாயும், மற்றொரு கணக்கில் 13 ஆயிரத்து 947 ரூபாயும் உள்ளது. இந்தியன் வங்கி, அரியலூர் கணக்கில் 10 லட்சம் ரூபாய் உள்ளதாகவும், அது தேர்தல் செலவுக்கானது என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமாவளவனின் பெயரில் நிலம் எதுவும் இல்லை. எனினும் குடியிருப்பு மனை 25 சென்ட் மட்டும் உள்ளது. திருமாவளவனுக்குச் சொந்தமாக ஒரு குண்டுமணி தங்கம், வெள்ளி கூடக் கிடையாது என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் அவருக்கு சொந்தமாக 4 கார்களும், ஒரு டெம்ப்போ ட்ராவலரும் உள்ளன. குறிப்பாக ரூ.11 லட்சம் மதிப்பில் டெம்போ டிராவலர், தலா 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 டாட்டா சஃபாரி கார்கள், ரூ.32 லட்சம் மதிப்பில் ஃபோர்ட் எண்டவர், 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஹூண்டாய் கிரெட்டா கார் ஆகியவை திருமாவளவனுக்குச் சொந்தமாக உள்ளன.
திருமாவளவன் மீது நிலுவையில் 7 வழக்குகள் உள்ளன. எனினும் எந்த வழக்கிலும் அவர் தண்டிக்கப்படவில்லை.
சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி ஆகியோர் களம் இறங்குகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu