சிதம்பரம் கோயில் மீது புகார்கள்: விளக்கம் கோருகிறது இந்து சமய அறநிலையத்துறை

சிதம்பரம் கோயில் மீது புகார்கள்: விளக்கம் கோருகிறது  இந்து சமய அறநிலையத்துறை
X
சிதம்பரம் நடராஜர் கோயில் குறைபாடுகள் குறித்து 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் கடந்த 7, 8ம் தேதிகளில் அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி சுகுமாரன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டபோது, தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வரவு செலவு கணக்குகளையும் காட்ட மறுத்துவிட்டனர்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை, பொதுமக்களிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்டது. அதன்படி கடந்த மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் பெறப்பட்ட 19,405 புகார் மனுக்களில் 14,098 மனுக்கள் திருக்கோவில் நிர்வாகத்தின் மீது குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் மீது 28 முக்கிய புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் பெண்களை மரியாதை குறைவாக நடத்துவது, குழந்தை திருமணம் நடத்துவது, மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை, ஆண்டாள் சிலையை மறைத்து வைத்துள்ளது, கோயிலுக்கு வரும் பக்தர்களை தரக்குறைவாக நடத்துவது போன்ற புகார்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து மனுக்களில் கூறப்பட்டுள்ள குறைபாடுகள் பற்றி தகுந்த விளக்கம் அளிக்க சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறையின் விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இந்த புகார்கள் தொடர்பாக 15 நாட்களுக்குள் சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare