கர்நாடக அரசை கண்டித்து சிதம்பரத்தில் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு துணைபோகும் மத்திய அரசைக் கண்டித்தும் சிதம்பரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று கர்நாடக மாநில அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு பட்ஜெட்டில் 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 4 மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என உத்தரவு இருக்கிறது. சுமார் 67 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. இதுகுறி,த்து கேட்டால் குடிநீர் தேவை மின்சார தேவை என காரணம் சொல்கிறது அந்த அரசு. இந்த அணை கட்டப்பட்டால் 7 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும். 19 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் உணவுப் பொருள்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் கூறுகிறார். இதற்கு மத்திய அரசு துணை போகக்கூடாது.
கடலூர் மாவட்டத்தில் இரண்டு புயல்களால் பாதிக்கப்பட்டதற்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் பயிர் காப்பீடு சரிவர வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை. கர்நாடக விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவிற்கு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu