சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மக்கள் திடீர் சாலை மறியல்

சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன்  மக்கள் திடீர் சாலை மறியல்
சிதம்பரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமால் நகர் , சிவஜோதி நகர் , ஓமக்குளம், உள்ளிட்ட நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஓராண்டு காலமாகவே சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், குடிநீர் பற்றாக்குறை குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் இடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய கிராம பொதுமக்கள், சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓமக்குளம் பகுதியில் திடீரென காலி குடங்களை சாலையில் வைத்து மறியலில் ஈடு பட்டனர்.

பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த சிதம்பரம் நகர போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்பு சாலைமறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: அத்தியாவசியத்தில் ஒன்றான குடிநீர் பிரச்னை கடந்த ஓராண்டு காலமாக நிலவி வருவதால், குடிநீர் தட்டுப்பாடு குறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள் நாங்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளோம். மேலும் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. ஆண்கள் மதுபானம் குடிப்பார்கள், ஆனால் பெண்கள் எங்களுக்கு குடிக்க குடிநீர் தான் வேண்டும் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் சாலை மறியல் செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story