'சிதம்பரம் கோயிலுக்கு வந்தால் மட்டும்தான் தொற்று பரவுமா?' எச்.ராஜா கேள்வி
எச். ராஜா.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கட் கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி நாளை நடைபெற இருந்த தேரோட்டத்திற்கு கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் பரபரப்பான சூழ்நிலையில் பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நடராஜர் கோயில் தெற்கு சன்னதி நுழைவு வாயில் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோயிலை அபகரிக்க ஒரு கும்பல் முயற்சித்தது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பால் அது நடைபெறவில்லை.தில்லை நடராஜர் கோயில் தேரோட்டம் நடத்தக் கூடாது என்கிறார்கள். தமிழக முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் ஏராளமானோர் கூடுகிறார்கள். நடராஜர் கோயிலுக்கு வந்தால் மட்டும்தான் தொற்று பரவுமா? சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தை பா.ஜ க வினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியாவது தேரோட்ட விழாவை நடத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சி குண்டாஸில் சென்றவர்கள் எல்லாம் தமிழக அமைச்சராக இருக்கின்றனர். ஒரு அமைச்சர் என்னை வெறி நாய் என்கிறார். திருடனைப் பார்த்து நாய் குறைக்கத்தான் செய்யும். இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களை கொள்ளை அடிக்கும் துறையாக உள்ளது.
கடந்த வருடம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிமன்ற உத்தரவுபடி தேரோட்டம் நடந்தது. தேரோட்டம் நடக்கவில்லை என்றால் அரசனுக்கு ஆகாது என்று சொல்வார்கள். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் இடிந்து வருகிறது. அதை பராமரிக்கவில்லை. ஆனால் நன்றாக இருக்கின்ற கோயில்களை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்களில் அரசு ஈடுபடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu