அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் தர்ணா போராட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக  ஊழியர்கள் தர்ணா போராட்டம்
X
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம். முறையற்ற பணி நிரவல் மற்றும், கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கவில்லை எனவும் குற்றச்சாட்டு. 3 மாதமாக ஊதியம் பெற முடியவில்லை என வேதனை


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிச் சிக்கலில் சிக்கித் தவிப்பதால் தனிச்சட்டம் இயற்றி பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றது. பின்னர் இங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி நிரவல் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள், இளநிலை தொழில்நுட்ப அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட 179 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி நிரவல் செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் பணி நிரவலில் சென்ற இடங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொறுப்புகளில் நியமிக்கப்படாமல் பல்வேறு பொறுப்புகளில் பணி அமர்த்தப்பட்டனர். இதுகுறித்து அந்த ஊழியர்கள் ஏற்கெனவே சிதம்பரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையையும் பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கவில்லை.

இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட பணி நிரவல் ஊழியர்கள் இன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் இந்த கோரிக்கை குறித்து அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பணி நிரவல் ஊழியர் ராகுல், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து தமிழக அரசின் 10 பொறியியல் கல்லூரிக்கு ஊழியர்கள் பணி நிரவல் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணி வழங்கப்படவில்லை. இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதால் கலைந்து செல்கிறோம். எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் மீண்டும் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!