புதுச்சேரி, தெலுங்கானா இரட்டை குழந்தைகள்-தமிழிசை

புதுச்சேரி, தெலுங்கானா இரட்டை குழந்தைகள்-தமிழிசை
X

புதுச்சேரியும் தெலுங்கானாவும் எனக்கு இரட்டை குழந்தைகள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிதம்பரத்தில் கூறினார்.

தெலுங்கானா மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். இதையடுத்து இன்று காரைக்காலில் ஆய்வுப் பணிக்காக சென்ற அவர் பல்வேறு ஆய்வுப் பணிகளை முடித்து விட்டு பல்வேறு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் இரவு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் தீட்சிதர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி அழைத்து சென்றனர்.

தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.கொரோனாவில் இருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து உள்ளேன். தடுப்பூசி நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த தடுப்பூசியை எல்லோரும் எவ்வித சுணக்கமும் இல்லாமல் இணக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

சிதம்பரம் நடராஜர் கோவில் எனது மனதுக்கு இணக்கமானது. அதிக நாள் அரசியலில் இருந்த போது சவாலான சூழலில் நான் இந்த கோவிலுக்கு வந்து இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு இந்த வாய்ப்பை அவர் அளித்திருக்கிறார். புதுச்சேரி, தெலுங்கானா இரண்டுமே எனக்கு இரட்டை குழந்தைகள். இரண்டையும் சரியாக நிர்வகிப்பேன். புதுச்சேரி மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு ஒவ்வொன்றாக சரி செய்வேன் என்று கூறினார்.தொடர்ந்து சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலுக்கு சென்ற தமிழிசை , அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

Tags

Next Story