புவனகிரி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பு.
கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரசாரம் செய்தார். புவனகிரி பாலம் அருகில் நடந்த பிரசார கூட்டத்தில் வேனில் இருந்தபடியே அருண்மொழித்தேவனுக்கு ஆதரவு திரட்டி எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது.
ஸ்டாலின் உண்மைபேசினால் எதிர்கட்சி தலைவராகவாவது வரமுடியும்
ஸ்டாலினுக்கு செல்லும் இடமெல்லாம் இல்லாததை கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். காவிரி பிரச்சனையில் நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான். அந்த தீர்ப்பை அரசிதழில் பெறச் செய்தது அம்மாதான். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதன் விளைவாக அரசிதழில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. விஞ்ஞான உலகத்தில் மக்கள் எல்லோரையும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் ஸ்டாலின் உண்மைகளைப் பேச வேண்டும். அப்போதுதான் எதிர்க்கட்சித் தலைவராகவாவது வர முடியும். பல இடங்களில் நான் ஊர்ந்து சென்று முதல்வரானேன் எனக் கூறுகிறார். நான் என்ன பாம்பா ? பல்லியா? ஊர்ந்து செல்வதற்கு நானும் மனுஷன்தான். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்போடு பேசவேண்டும் ஒரு முதல்வரை இப்படி எல்லாம் பேசுவதா?
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கையெழுத்திட்டது யார்
ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கும்போதுதான் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். ஆனால் எதிர்ப்பு வந்ததால் தற்போது பல்டி அடிக்கிறார். முன்புபோல் விவசாயிகளை, பொது மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது. என் தாத்தா காலம் தொட்டு நான் விவசாயம் செய்து வருகிறேன்.
அதனால் நான் விவசாயி என்று கூறிக் கொள்கிறேன். ஆனால் மின் கட்டணத்தை குறைக்க விவசாயிகள் போராடியபோது அவர்களை சுட்டது திமுக ஆட்சிதான். நான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்துள்ளேன். உழைப்பாளிகளுக்குதான் உழைப்பைப் பற்றி தெரியும்.
கருணாநிதியின் மகன் எனக் கூறுகிறார் ஸ்டாலின். அது சரி .ஆனால் ஸ்டாலினுக்கென என்ன அடையாளம் உள்ளது. இன்றைக்கு அம்மா ஆட்சியில் பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டம் 3 ஆயிரம் கோடிக்கு மேல் பொது தரப்பட்டுள்ளது. அறுவடையான பயிர்கள் மழையால் நாசமானபோது அதற்கும் நிவாரணம் தந்தது இந்த அரசுதான்.
உழவன் செயலி அறிமுகம் செய்து அதில் விவசாயிகளுக்கு அவ்வப்போது நல்ல திட்டங்களையும், ஆலோசனைகளையும் சொல்லி வருகிறோம். இது அறிவுபூர்வமான திட்டம். ஆனால் இதைப்பற்றி எல்லாம் ஸ்டாலின் பேசாமல் என் மீது பழி போடுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது
தமிழகம் சாதி, மத சண்டை இல்லாத அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அதனால்தான் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தடையற்ற மின்சாரம், குடிநீர் நல்ல முறையில் வழங்கப்படுகிறது. அதனால்தான் தொழில் துறையும் வளர்ச்சி அடைந்துள்ளது. குடிமராமத்து திட்டத்தை பயன்படுத்தி குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு அதிலிருந்த வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்று நிலத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
கடல்நீர் உட்புகாமல் தடுக்க ரெகுலேட்டர் அமைப்பது, தடுப்பணைகள் அமைப்பது, வேண்டிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைப்பது, தரமான சாலைகள் அமைப்பது எல்லாமே இந்த ஆட்சிதான். தமிழகத்தில் சாலைகள் தரமாக உள்ளது பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தில் பேசும் அளவிற்கு தமிழகத்தின் வளர்ச்சி உள்ளது.
வருடத்திற்கு 6 விலையில்லா சிலிண்டர்
அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தை செயல்படுத்தி அனைவருக்கும் மருத்துவ சேவைகளை செய்து வருகிறோம். நீட் நிர்வு தமிழகத்திற்கு வந்தது நீதிமன்ற உத்தரவால்தான். ஆனாலும் அரசு பள்ளியில் படித்த மாணவர் பாதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை மருத்துவ மாணவர்கள் சேருவதற்கு வழங்கினோம். தாலிக்கு தங்கம் திட்டம், காப்பீட்டுத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நல்ல முறையில் நடந்து வருகிறது. வருடத்திற்கு 6 சிலிண்டர், இலவச வாஷிங் மெஷின், முதியோர் உதவித்தொகை உயர்வு, வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் மீனவர்களுக்கு நிவாரண நிதி உயர்வு, 100 நாள் வேலை 150 நாடாக மாற்றியது போன்ற எண்ணற்ற பல திட்டங்களை மீண்டும் ஆட்சிக்கு வந்து செயல்படுத்த உள்ளோம்.
ஏழை மக்களுக்கு சொந்த வீடு, நிலம் இல்லாவிட்டால் சொந்தமான நிலத்தை அரசே வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டமும் நிறைவேற்றப்படும். புவனகிரி, கம்மாபுரம் ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்படும். கடல் நீர் உட்புகாமல் தடுக்க வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்படும். கள்ளிப்பாடி - காவனூர் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற புவனகிரி தொகுதியில் போட்டியிடும் அருண்மொழித்தேவனுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu