கடலூர், சிதம்பரம் பகுதியில் அதிமுகவினர் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்
விழுப்புரம் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்தார்.தொடர்ந்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் பேருந்து நிலையம் அருகே மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் தங்கமணி, நகர துணைத் தலைவர் கந்தன், தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க நினைக்கும் திமுக அரசைக் கண்டித்தும், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோல கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கஞ்சித்தொட்டி முனை பேருந்து நிலையம் அருகில் அதிமுகவினர் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் சுமார் 30 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மாவட்டம் முழுவதும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu