கடலூர் தி.மு.க எம்.எல்.ஏ.அய்யப்பன் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

கடலூர் தி.மு.க எம்.எல்.ஏ.அய்யப்பன்  கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
X

அய்யப்பன்  எம்.எல்.ஏ.

கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட கடலூர் எம்.எல்.ஏ.அய்யப்பனை கட்சியில் இருந்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நீக்கி உள்ளார்.

கடலூர் மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு தி.மு.க. அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, எம்.எல்.ஏ அய்யப்பன் ஆதரவாளராக கருத்தப்பட்ட கீதா குணசேகரன் போட்டியிட்டார். குறிப்பாக மறைமுக தேர்தலுக்கு முன்பு தி.மு.க. கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கடலூர் எம்.எல்.ஏ. இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், கடலூர் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 34 இடங்களை கைப்பற்றியது. கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் பதவிக்கு தி.மு.க.வில் சுந்தரி ராஜா,கீதா ஆகிய இரண்டு பேரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தி.மு.க. தலைமை சுந்தரி ராஜாவை அறிவித்தது.

மறைமுக தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ‌‌.அய்யப்பன் ஆதரவால் தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரை கடத்தியதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து மேயர் தேர்தலில் தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து தி.மு.க. மாவட்ட பொருளாளர் குணசேகரனின் மனைவி கீதா குணசேகரன் போட்டியிட்டார்.

மறைமுகத் தேர்தலில் தி.மு.க. மேயராக கடலூர் நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரி 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தி.மு.க. கட்சியில் போட்டியிட கீதா குணசேகரன் 12 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

முன்னதாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டு கவுன்சிலர்களில், அ.தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலை புறக்கணித்தனர். இதில் மீதமிருந்த 39 கவுன்சிலர்களில் 32 பேர் மட்டுமே மறைமுக தேர்தலில் வாக்களிக்க பங்கேற்றனர். தி.மு.க.வை சேர்ந்த கீதா குணசேகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 7 கவுன்சிலர்கள் புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததால், வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ‌‌.அய்யப்பனுக்கு ஆதரவாக செயல்பட்ட கீதா குணசேகரன் தரப்பினர் கவுன்சிலர்களை கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.



இந்த நிலையில் தொடர்ந்து கழக கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோ‌‌.அய்யப்பனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டு உள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil