சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், 2018 ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில், முன்னோடி திட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சதுப்பு நிலங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போதைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பணிகளுக்காக நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள அரசுக்கு அனுமதியளித்து, வழக்கின் விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
சதுப்பு நிலங்கள் என்பது கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர்களுக்கு குறைவான ஆழம் கொண்ட பல்வேறு வகைப்பட்ட சூழல் தன்மைகளைக் கொண்ட நீர் நிலைகளாகும். கால் வைத்தாலே சேறும் சகதியுமாக இருக்கும் இந்த சதுப்பு நிலங்கள்தான் பூமியில் உயிரினங்கள் செழித்து வளர பெரும் உதவி செய்கிறது.
அதாவது, நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க, நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை குறைக்க, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, உயரும் கடல் நீரை உள்வாங்க, மாசு மற்றும் திடக் கழிவுகளை கட்டுப்படுத்த, கரியமில வாயு மற்றும் மீத்தேனை உறிஞ்ச, நீர் மகரந்தச் சேர்க்கை நடைபெற, மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்த, மண் அரிப்பைத் தடுக்க, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்தைத் திடப்படுத்தி வளப்படுத்த, புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்த, வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க சதுப்பு நிலங்கள் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu