ஊழல் வழக்கில் கைதாகும் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க ஐகோர்ட் உத்தரவு

ஊழல் வழக்கில் கைதாகும் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க ஐகோர்ட் உத்தரவு
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

ஊழல் வழக்கில் சிக்கும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சிவன்தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன். அவரது மனைவி தனலட்சுமியும், மகன் டில்லிராஜாவும் ஸ்ரீபெரும்புதூரில் 2000 சதுர அடி நிலத்தை வாங்கினர். 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக மூன்று பேருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திரன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், நிலம் வாங்கிய பின் காவல் துறை அதிகாரிகள், உள்ளூர் கவுன்சிலர் மற்றும் வழக்கறிஞருடன் சேர்ந்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்ட போது அதை தர மறுத்ததால் தங்களுக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள மனுதாரருக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணை துவங்கி விட்டதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுத்து விட்டார். அதேசமயம், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் காவல் துறை அதிகாரிகள் சமர்ப்பித்த சொத்து விவரங்களை ஆய்வு செய்யவும், ஏதேனும் குறைபாடுகள் கண்டறிந்தால், அந்த சொத்துக்களை முடக்குவது உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசுத் துறைகளில் நிலவும் ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தனி தொலைபேசி எண்கள், வாட்ஸ் ஆப் எண்களை ஏற்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டிய நடைமுறைகளை அனைத்து ஊழல் வழக்குகளிலும் பின்பற்ற வேண்டும் எனவும், தேவைப்பட்டால் தற்காலிகமாக சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஊழலை கட்டுப்படுத்த தற்போது அமலில் உள்ள சட்டங்கள் போதுமானவை அல்ல என்பதையும், அரசுத்துறைகளில் பெருகி வரும் ஊழலையும் கருத்தில் கொண்டு, ஊழல் அரசு ஊழியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக 1999 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, 24 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்ட மசோதாவை நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்றம் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story