பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு டிச.9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு டிச.9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
X

பைல் படம்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு டிச.9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் செயல்பட்டுவரும் அரசு பள்ளிகளில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நவ.28,29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதுகுறித்த சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியிருந்தது.

அதில், நிகழ் கல்வியாண்டில் 1.8.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிட மிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த விவரங்களின் அடிப்படையில், ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்வதற்கான கலந்தாய்வு வரும் 28- ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 29-ஆம் தேதி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எமிஸ் இணையதளம் வழியாக நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், வரும் 28ம் தேதி எமிஸ் இணையதளம் வழியாக நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு திட்டமிட்டபடி நவம்பர் 29ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து ஆசிரியருடன் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து கலந்தாய்வு நடைபெறுகிறது.

022-23 கல்வியாண்டிற்கான 01.08.2022 நிலவரப்படி முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (BT & PG Staff Fixation) நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post With Person) முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 28.11.2022 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 29.11.2022 முதுகலை ஆசிரியர்களுக்கும் EMIS இணையதள வாயிலாக (Online Deployment Counselling)நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 28.11.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் (BT Deploymetn Counselling) கலந்தாய்வு மட்டும் நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. இக்கலந்தாய்வு 09.12.2022ம் தேதி அன்று நடைபெறும்.

மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (PG Deployment Counselling) திட்டமிட்டபடி 29.11.2022 அன்று நடைபெறும் என்பதையும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!