தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்குபாதிப்பு
சென்னை விமான நிலையத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் தமிழகத்திலும் பிற பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 பேருக்கு மட்டுமே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 39 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 21 பேருக்கும் 10 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. நேற்று கொரோனா பரிசோதனை முடிவில் 11 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 700 பேருக்கு சோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29 மாணவர்களுக்கும், பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐஐடியில் உள்ள உணவு விடுதிகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினரும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்த நிலையில், மக்கள் முகக்கவசம் கூட அணியாமல் சாலைகளில் சுற்றத் தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சொல்லவில்லை என்றும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். டெல்லி, உத்தர பிரதேசன் போன்ற வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அந்தந்த மாநிலங்கள் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளனர்.
டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை நாள்தோறும் 50 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளது. தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.
கடந்த இரண்டு வருடமாக கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் கடந்த 3 மாதமாக கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக மக்கள் நிம்மதி அடைந்தனர். தங்களது இயல்பான வாழ்க்கை தொடங்கினர். இந்தநிலையில் சீனா, தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக மக்கள் அச்சம் அடைந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவிற்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. டெல்லியில் அதிகரித்த கொரோனா பரவல் மெல்ல மெல்ல பல்வேறு மாநிலங்களிலும் பரவ தொடங்கியுள்ளது மக்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu