கொரோனாவிற்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை..! -சித்தமருத்துவர் எம்.வனஜா
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவின் முதல் அலையிலும் சரி, இரண்டாவது அலையிலும் சரி, கொரோனா பாதிப்பிலிருந்து மீள சித்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்ட அனைவரும் பூரண குணமடைந்துள்ளனர். இதில் ஒருவர் கூட உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதால், சித்த மருத்துவத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
கொரோனா தொற்று முதல் அலையில் தமிழகத்தின் மத்திய மாவட்டங்களிலேயே அதிகம் பாதிக்கப்பட்டது தஞ்சாவூர் மாவட்டம் தான். முதல் அலையிலும், தற்போது இரண்டாவது அலையிலும் சேர்த்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதில் கடந்த ஜூன் 17-ம் தேதி வரை 660 பேர் உயிரிழந்துள்ளனர். 55 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றை குணப்படுத்த தொடக்கத்திலிருந்து சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்க தமிழக அரசு முன் வந்தது. அதன்படி தஞ்சாவூர் மாவட்ட சித்த மருத்துவ மையத்தின் சார்பில் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சித்தா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு நல்லமுறையில் தினமும் சிகிச்சை அளிக்கப்பட்டதால், பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைந்து திரும்பியுள்ளனர்.
கொரோனா முதல் அலையில் 379 பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டதில் அனைவரும் குணமடைந்துள்ளனர். அதே போல் இரண்டாவது அலையில் 609 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 17-ம் தேதி வரை 575 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளவும் பெரும்பாலானோர் கபசுர குடிநீரை பருகி வருகின்றனர்.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் போது தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேருக்கு கபசுரகுடிநீர் பொடியும் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் எம்.வனஜா கூறுகையில்,
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளித்ததில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து பலரும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வருகின்றனர்.
நுரையீரலில் தொற்று அதிகமாகி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களை கூட சித்த மருத்துவ முறையில் பூர்ண சந்திரோதயம் என்ற சித்த மருத்துவ சிகிச்சையில் குணப்படுத்தியுள்ளோம். அலோபதி மருத்துவம் எடுத்துக் கொண்டவர்களும், கொரோனாவின் போது சித்த மருத்துவத்தை அச்சமின்றி எடுத்துக் கொண்டனர்.
கொகரோனாவின் மூன்றாவது அலை என்பது குழந்தைகளை பாதிக்ககூடும் என கூறப்பட்டு வருகிறது. இதற்கும் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ துறை தயாராக இருக்கிறது. குழந்தைகளுக்கு உரைமாத்திரை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி வருகிறோம்.
3 வயது முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு இந்த மாத்திரை கொடுப்பதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும். குழந்தைகளுக்கு துரித உணவுகளையும், எண்ணெய் அதிகம் உறிஞ்சக்கூடிய உணவுப் பண்டங்களையும் கொடுக்க வேண்டாம், அதை மீறி சாப்பிடும் போது வயிறு உப்பி, வலி ஏற்படும். இதற்கு நொச்சி குடிநீர் பருகினால் அந்த வலி சரியாகிவிடும்.
குழந்தைகளை கொரோனாவிலிருந்து காப்பாற்ற அவர்களது உணவு முறைகளை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அவர்களுக்கு ஏதாவது உடலில் தொந்தரவு என்றால் அலட்சியமாக இருக்ககூடாது, உடனடியாக மருத்துவர்களை அணுகவும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யோகா ஆகிய 5 துறைகளிலும் 51 மருத்துவர்கள் பணியாற்றி சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளித்து பொதுமக்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகின்றனர். கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதற்குரிய சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ துறை முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu