தமிழகத்தில் கொரோனா அலர்ட்: தமிழக அரசு உத்தரவு
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் பல மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து காணப்பட்டது. ஆனால், சமீபத்தில் மாநிலம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. அதன் அடிப்படையில் கோவையில் 20, சென்னையில் 16, செங்கல்பட்டில் 5, சேலத்தில் நான்கு பேர் என மாநிலம் முழுதும் நேற்று 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக்கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாளில் 2 என்ற அளவில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை; உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோரால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது. இன்ப்ளூன்ஸா காய்ச்சல் பாதிப்புக்கு தமிழகத்தில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாரந்தோறும் 35 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா 2ம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா அதிகரித்தாலும் பதற்றப்பட தேவையில்லை என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu