குன்னூரில் 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து; 8 பேர் உயிரிழப்பு

குன்னூரில் 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து;  8 பேர் உயிரிழப்பு
X

 குன்னூரில் 50 அடி பள்ளத்தில் பேருந்து  கவிழ்ந்த விபத்து 

Coonoor bus accident- நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

Coonoor bus accident- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு தென்காசி மாவட்டம் கடையத்திற்கு பஸ்சில் வீடு திரும்பியபோது, இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பேருந்து, வேன்கள், கார்கள் என வாகனங்களில் சாரை சரையாக அணி வகுத்து வருகின்றன. அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 59 பயணிகளுடன் ஊட்டிக்கு பேருந்து ஒன்று வந்துள்ளது.

ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு பேருந்தில் சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது குன்னூர் -மேட்டுப்பாளையம் மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும் போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்தது. சுமார் 50 அடி பள்ளத்தில் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது.


இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த சுற்றுலாப்பயணிகள், படுகாயமடைந்து அச்சத்தில் அலறினர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீ அணைப்பு துறையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதலில் இந்த விபத்தில் சிக்கி 3 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவரும் நிலையில், இந்த பஸ் விபத்தில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக குன்னூர் மலைப்பாதையில் போக்குவரத்து சுமார் 2 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது வரை மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாரல் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து அறிந்த நீலகிரி கலெக்டர் அருணா, போலீஸ் எஸ்.பி பிரபாகரன் விபத்து நடந்த இடத்தை, நேரில் பார்வையிட்டனர்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென்காசி கலெக்டர் அறிவிப்பு

இந்த விபத்து குறித்து கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள அவசர கால எண் 04633 290548 மற்றும்1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil