பரவும் டெங்கு காய்ச்சல் : தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை

பரவும் டெங்கு காய்ச்சல் : தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை
X

டெங்கு கொசு - கோப்புப்படம் 

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாவதை தடுப்பது குறித்து, தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. தலைமை செயல்கத்தில் நடைபெற உள்ள இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரம், பொதுப்பணித்துறை மற்றும் துறைச்சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதில், டெங்கு கொசு ஒழிப்பில் கூடுதலாக கவனம் செலுத்துவது, டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. அதோடு, குடியிருப்பு பகுதிகளில் கொசு உற்பத்தியாவதை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பாதிக்கப்படுவோருக்கு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்து இருப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது

மழைக்காலம் தொடங்கினாலே டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். நடப்பாண்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்மையில் கூட, மதுரவாயலை சேர்ந்த ரக்‌ஷன் எனும் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவனின் குடும்பம் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறுவனின் உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் , சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டைச் சரி செய்யாத திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதை தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!