ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி.. கே.எஸ். அழகிரி அறிவிப்பு...
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி. (கோப்பு படம்).
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் . இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி மனுத் தாக்கல் நிறைவடைகிறது. 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற 9 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலுக்குப் பிறகு மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன . இங்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆன் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் திருநங்கைகள் 23 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் வழக்கம்போத இந்த தேர்தலிலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன.
ஏற்கெனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவும், அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் யுவராஜியும் போட்டியிட்டனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இதுதொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். அனைத்துக் கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெறச் செய்யும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu