பேரறிவாளனின் விடுதலையால் காங்கிரஸ் அதிருப்தி: போராட்டம் அறிவிப்பு
கே.எஸ். அழகிரி.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் , 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை, பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே நேரம், காங்கிரஸ் கட்சி, இத்தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், ஏழு பேரை, உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.
கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை ( 19ம் தேதி) காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu