திருச்சி ரேஷன் கடையில் மோடி படம் வைக்க முயன்றதால் மோதல்-கைகலப்பு
தமிழகத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையின் படி தமிழக அரசு சார்பில் மோடி படம் வைக்கப்படவில்லை.
இதன் காரணமாக பாரதீய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களிலும் மோடி படங்களை வைத்து வருகிறார்கள். அப்படி வைக்கப்படும் இடங்களிலெல்லாம் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி பொன்னகர் காமராஜர்புரம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இன்று மதியம் பாரதிய ஜனதா கட்சியினர் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் திடீரென வந்து பிரதமர் மோடியின் உருவ படத்தை அங்குள்ள சுவரில் மாட்டினார்கள். இதற்கு அந்த பகுதி மக்கள் மற்றும் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அதிரடியாக உள்ளே புகுந்து மோடி படத்தை எடுத்து கீழே போட்டனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் ராமதாஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.போலீசார் வந்து கைகலப்பில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி ரேஷன் கடையை பூட்டினார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைகலப்பில் காயமடைந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செசன்ஸ் கோர்ட் போலீசார் இது தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu