ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நிறைவு
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை நிறைவுபெற்றுள்ளது. இதில் ரூ. 4.5 கோடி ரொக்க பணம், 2.7 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பி.,யுமான ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வரி ஏய்ப்பு புகாரில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. 5ம் நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை தொடர்ந்தது.
குறிப்பாக, சென்னை அடையாறில் கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அதன் அருகில் உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகத்திலும் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது, அடையாறு வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை புலனாய்வு ஆணையர் சுனில் மாத்தூர், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன், மகள் ஸ்ரீனிசா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.
சோதனையின் போது, வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள் உட்பட பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். சோதனையில் 4.5 கோடி ரூபாய் பணம் 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்டவைகளை மிகப் பெரிய பெட்டி ஒன்றில் வைத்து வருமானவரித்துறையினர் எடுத்துச் சென்றனர். கடந்த 5 நாட்களாக ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை, தற்போது முடிவுற்றதாக வருமான வரித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu