சர்ச்சை பெண் சாமியார் மீது போலீசில் பரபரப்பு புகார் - தலைமறைவு
சாமியார் அன்னபூரணி அரசு
செங்கல்பட்டு நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறி, கடந்த வாரம் போஸ்டர்களை ஒட்டிய பரபரப்பை ஏற்படுத்தியவர், சர்ச்சை சாமியார் அன்னபூரணி. இவர் குறித்த சர்ச்சை செய்திகள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமிக்க, வரும் புத்தாண்டு தினத்தில் செங்கல்பட்டில் நடக்க இருந்த, இவரது அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
பெண் சாமியார் அன்னபூரணி, கடந்த வாரம் செங்கல்பட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரது காலில் விழுந்து பக்தர்கள் கதறி அறியும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த நிகழ்ச்சியை, கொரோனா தடுப்பு விதிகளை மீறி நடத்தியதாக, அன்னபூரணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்னபூரணி மீண்டும் வரும் 1ம் தேதி செங்கல்பட்டில் உள்ள அதே திருமண மண்டபத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், 1ம் தேதிக்கு நடக்க இருந்த நிகழ்ச்சிக்கு, முன் அனுமதி பெறாததால் தடை விதித்தனர். ஏற்கனவே நடத்திய அருள்வாக்கு நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அன்னபூரணி மீது செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அன்னபூரணியை போலீசார் தேடி வருவதை அறிந்ததும், அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சர்ச்சையில் சிக்கியுள்ள அன்னபூரணியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், இந்து மத நம்பிக்கைகளை அவமதித்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்.பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu