கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்- தி.மு.க. ஆட்சி பற்றி முன்னாள் முதல்வர் இபிஎஸ்
தமிழக அரசியலில் இரு துருவங்களாக இருப்பது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள். தமிழகத்தில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி கட்டிலை அலங்கரித்து வருகின்றன. ஆட்சியில் இருக்கும் போது ஒரு மாதிரியாகவும், ஆட்சியில் இல்லை என்றால் வேறு மாதிரியாகவும் பேசுவதில் இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் வல்லவர்கள்.
கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்
எடப்பாடி பழனிசாமி தமிழக முதல் அமைச்சராக இருந்த போது தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்போது பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே நடக்கிறது. வேறு எந்த பணிகளும் நடப்பது இல்லை என பிரசாரம் செய்து வந்தார். அ.தி.மு.க. ஆட்சி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்போது இருந்த கவர்னரிடம் மனுக்களையும் கொடுத்து வந்தார்.
தலைகீழ் மாற்றம்
2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தோல்வியை தழுவியதால் நிலைமை தலைகீழாக மாறியது. தேர்தலில் பெற்ற வெற்றியால் தி.மு.க. ஆட்சி பீடத்தில் ஏறியது. அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக மாறியது. அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தற்போது முதல் அமைச்சர். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
வார்த்தை ஒன்றே... வாய் தான் வேறு
அந்த வகையில் அன்று தி.மு.க. செய்த வேலைகளை எல்லாம் இப்போது அ.தி.மு.க. செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சக கட்சி நிர்வாகிகளுடன் இன்று தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியை சந்தித்து தி.மு.க .ஆட்சி மீது ஊழல் பட்டியலை கொடுத்து உள்ளார். அது மட்டும் அல்ல அன்று ஸ்டாலின் பேசிய அதே வார்த்தைகள் அதாவது கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்ற இந்த வார்த்தைகளையும் குற்றச்சாட்டாக சுமத்தி இருக்கிறார். வார்த்தைகள் ஒன்று தான் அதே வார்த்தைகளை கூறும் வாய்கள் தான் மாறி உள்ளன.
கவர்னருடன் சந்திப்பு
இனி இன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போமா? சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கவர்னருடனான இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.
கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திறமையற்ற அரசு
தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது.கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை. கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் குண்டுவெடிப்பு நடந்திருந்தால் பாதிப்பு அதிகமாயிருக்கும். பல பேர் உயிரிழக்க நேரிட்டிருக்கும். தீவிரவாதம் என்றாலே உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். உளவுத்துறை முன்கூட்டியே தெரிந்து இந்த குண்டுவெடிப்பைத் தடுத்திருக்கலாம். தி.மு.க. அரசு ஒரு திறமையற்ற அரசு.
தலைவிரித்தாடும் லஞ்சம்
கள்ளக்குறிச்சி கனியாமூர் சம்பவத்தில் முன்கூட்டியே விசாரணை நடைபெற்றிருந்தால் வன்முறை, கலவரம் ஏற்பட்டிருக்காது. மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தல் சர்வ சாதாரணமாக இங்கு நடக்கிறது. அனைத்துத் துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தி.மு.க. அரசு என்றாலே கமிஷன், கலெக்சன் கரப்ஷன் தான். தி.மு.க. ஆட்சியில் தற்போது மருந்து தட்டுப்பாடு என்பதை அமைச்சரே ஒத்துக்கொண்டுள்ளார். மருந்து கொள்முதலில் ஊழல் நடந்து வருகிறது. காலாவதி மருந்தும் பயன்பாட்டில் உள்ளது.
நம்ம ஊரு சூப்பருஊழல்
இன்று உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை தி.மு.க .அரசு பறித்துவிட்டது. 'நம்ம ஊரு சூப்பரு' விளம்பர பேனரில் மெகா ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஒப்பந்ததாரருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 350 மதிப்புள்ள ஒரு பேனருக்கு ரூ. 7,900 செலவு செய்வதாக கணக்கு காட்டியுள்ளனர். பணி செய்வதற்கு முன்னரே, தி.மு.க. அரசு நிதி வழங்கி விடுகிறது. இதுவே தி.மு.க. ஊழலுக்கு உதாரணம்.
தட்டி கேட்கவேண்டும்
டெண்டர் இல்லாமல் பார் நடத்துதல், 24 மணி நேரமும் மது விற்பனை என டாஸ்மாக்கிலும் மெகா முறைகேடு நடந்து வருகிறது. அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். கவர்னரை தி.மு.க. விமர்சிப்பது வாடிக்கையான ஒன்று. கவர்னரின் செயல்பாடு நன்றாக உள்ளது. கவர்னர் தான் தி.மு.க.வை தட்டிக்கேட்க வேண்டும்.
இவ்வாறுமுன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu