கோவை கார் வெடிப்பு சம்பவம்: 58 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் மெச்சத்தகுந்த பணியினை பாராட்டி தமிழக முதல்வர் காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
Coimbatore Police - சென்னை தலைமைச் செயலகத்தில் கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி இன்று 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
கோவை மாநகரில் கடந்த 23.10.2022 அன்று அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தினையடுத்து, விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவ்விடத்தில் தடயங்கள் ஏதும் கலைக்கப்பட்டுவிடாமல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை வேளையில் அப்பகுதியில் விழிப்புடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரைக் கண்டவுடன் ஜமேஷா முபினால் மேலும் அவ்வழியே தொடர்ந்து காரைச் செலுத்த இயலவில்லை. இதனைத் தொடர்ந்து அவ்விடத்திலேயே கார் சிலிண்டர் வெடித்து அவரும் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் காரணமாகவும், காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்றியதன் காரணமாகவும் பெரும் அசம்பாவிதம் கோவை மாநகரில் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒரு சில நபர்கள் உள்நோக்கத்துடன் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக தடுக்கப்பட்டு, தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் நிலைமை திறம்பட கையாளப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் தனிப்படைகள் மூலம் புலன் விசாரணை முடக்கிவிடப்பட்டு 148 தடயங்கள் சேகரிக்கப்பட்டு, வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் 24.10.2022 அன்றே கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஆறாவது நபரும் கைது செய்யப்பட்டார். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கைகள் அடுத்த தினமே (25.10.2022) மேற்கொள்ளப்பட்டன.
இரவும் பகலும் ஓய்வின்றி தன்னலமற்ற வகையில் பணியாற்றி வரும் தமிழ்நாடு காவல்துறையினரின் பணி போற்றத்தக்கதாகும். அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி சமூக அமைதியை நிலைநாட்டும் வண்ணம் சேவையாற்றிய காவல்துறையினரின் இப்பணியைப் பாராட்டி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 58 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவல் துறைக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கோவையில் வேறு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து துணிவாக செயல்பட்டு காக்கும் கடவுளாக காவல்துறை நண்பர்கள் செயல்பட்டுள்ளனர்; அவர்களுக்கு நன்றி. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மதத்தை வைத்து சதிகாரர்கள், பிளவுபடுத்த முற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu