நிலக்கரி சுரங்க ஏல விவகாரம்: முதல்வருடன் டெல்டா விவசாயிகள் சந்திப்பு

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்.
தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எடுப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் ஏல அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 4.4.2023 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 5.4.2023 அன்று காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையினை ரத்து செய்திட கோரி சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் ஏல அறிவிப்பினை ரத்து செய்தது.
இந்த நிலையில், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட மத்திய அரசை வலியுறுத்தி ரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (11.4.2023) தலைமைச் செயலகத்தில் நாகப்பட்டினம் - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவரும், காவிரி விவசாயிகளின் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளருமான காவிரி தனபாலன் தலைமையில் விவசாயிகள் சந்தித்து பேசினர்.
மேலும், திருவாரூர் மாவட்டம் - காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலாளர் சத்தியநாராயணா, மயிலாடுதுறை மாவட்டம் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகி குரு கோபி கணேசன், நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி சரபோஜி, தஞ்சாவூர் மாவட்டம் - கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சிந்தனைச் செல்வன், அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu