விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு:புதிய அறிவிப்புகள் வெளியிட்ட ஸ்டாலின்
கோப்பு படம்
தமிழக சட்டப்பேரவையில், காவல்துறை மற்றும் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்து பேசியதாவது:-
திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை. உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும் சரியாக செயல்படும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும்.
காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும். எந்த சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்
காவல்துறையினர் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. ஓரிரு சம்பவங்களை வைத்து காவல்துறையை விமர்சிக்க வேண்டாம்; காவலர்கள் மீது அரசுக்கு அக்கறை உள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும்.
காவல்துறையினருக்கு இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை ₹30 லட்சத்தில் இருந்து ₹60 லட்சமாக உயர்த்தப்படும். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து "போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக" சீரமைக்கப்படும். சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும்.
தமிழகத்தில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள், இனி காவல் நிலையம் வர வேண்டியதில்லை என்ற நடைமுறை ஏற்படுத்தப்படும். ரூ. 6.47 கோடியில் காவல்துறை அருங்காட்சியம் ஏற்படுத்தப்படும். காவல்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu