பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போதே பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை, செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பொதுப் பணி, நெடுஞ்சாலை, வேளாண் , மருத்துவம், மின்சாரம், வருவாய், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் , செயலாளர்கள் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.
பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வரைவுத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டங்கள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் 34 ஆறுகளும், நீர்வள ஆதாரத்துறையின் கீழ் 90 அணைகளும், 14,138 ஏரிகளும் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி இருப்பதால், அனைத்து நீர்நிலைகளும் உறுதியான நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பருவமழை எதிர்கொள்ள கூடுதலாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu