ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டும்: முதல்வர்

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டும்: முதல்வர்
X

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின். 

கோவையில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 34,723 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழ்நாடு அரசு சார்பில், உள்நாடு மற்றும் வெளிநாடு தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றுள்ள நிலையில், திமுக அரசு அமைந்த பிறகு, முதல் மாநாடு கோவையில் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி, புதிய நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, புதிய திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ஆகியன, கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில்துறையினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 34,723 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 52 நிறுவனங்கள் துவங்கப்பட்டு, 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவை, சென்னை, உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், இந்த நிறுவனங்கள் துவங்கப்பட உள்ளது.

இதே போல், வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் 7 நிறுவனங்களுடான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இதன் மூலம் 485 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதோடு, 1960 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. கோவை, காஞ்சிபுரம், ஓசூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த நிறுவனங்கள் அமைய உள்ளன. உலகின் தலைசிறந்த சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றும், பார்ச்சூன் 50 நிறுவனங்களிலும் ஒன்றான டசோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சார்பில், வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்தும் திறன்மிகு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இதை தொடர்ந்து 13,413 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக துவங்கப்பட உள்ள 13 திட்டங்களுக்கு, முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும் பின்டெக் 2021ம் ஆண்டிற்கான கொள்கையை வெளியிட்ட அவர், தமிழ்நாடு ஒற்றைச் சாளர கைபேசி செயலியையும் துவக்கி வைத்தார்.

பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் இல்லாமல் ஒரு ஆட்சி நடத்த முடியாது. மக்களை காப்பதில் அரசு வெற்றி அடைந்திருக்கிறது. சோதனையான காலத்தில் கூட ஏராளமான முதலீடுகளை அரசு ஈர்த்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 3வது முறையாக மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாடு வெறும் சம்பிரதாய மாநாடாக இல்லாமல் ஒப்பந்த கையெழுத்து போடக்கூடிய மாநாடாக உள்ளது.

முதலமைச்சர்களில் முதலிடத்தை நான் பிடித்திருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் அறிவித்துள்ளனர். அதில் அதிகாரிகள், அமைச்சர்களுக்கும் பங்குண்டு. தமிழ்நாடு முதலிடம் என்பதே எங்களின் நோக்கம். பரவலான பார் போற்றும் வளர்ச்சி என்பதை குறிப்பிட்டது போல் 32 மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கையை இம்மாநாடு ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தொட்டு துலங்காத தொழில்கள் இல்லை என்றாலும், வான்வெளி, பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மின்னனு பொருட்கள் தயாரிப்பில் சிறப்பு கவனம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்தை தமிழகத்தில் இருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!