இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் 'பரபர' பேச்சு

இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபர பேச்சு
X
இந்தி உள்பட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று, மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 1938ம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம்தான், தற்போது 2022ம் ஆண்டு வரை தணியாமல் உள்ளது. அன்று, பெரியார் மூட்டிய நெருப்பு, ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது. மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளது. மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ், தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல. இந்தி மட்டுமல்ல எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல. நாம் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியின் ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம். இந்தி மொழியை அல்ல, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.

நாம் தமிழ்மொழி பற்றாளர்களேத் தவிர, எந்த மொழிக்கும் எதிரான வெறுப்பாளர்கள் அல்ல. ஒருவர் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அவரது விருப்பத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வெறுப்பைத் தூண்டும் வகையில் அது திணிப்பாக மாறிவிடக்கூடாது. மாணவர்கள் போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1967ல் தீர்மானம் கொண்டு வந்தார் பேரறிஞர் அண்ணா.

இந்தியை திணிப்பதன் மூலமாக, மற்ற மொழி பேசக்கூடிய மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்ற பார்க்கிறார்கள். ஒருவனின் தாய்மொழி நிலத்தைப் பறித்து அந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்க பார்க்கின்றனர். அதனால்தான் இந்தி மொழியின் ஆதிக்கத்தை தொடர்ந்து நாம் எதிர்த்து கொண்டிருக்கிறோம்.

வீரமங்கை வேலுநாச்சியார், மானங்காத்த மருதுபாண்டியர், மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார்? வ.உ.சிதம்பரனாரை கப்பலோட்டிய தொழிலதிபர்தானே என்று டெல்லி அதிகாரி கேட்டுள்ளார். அவர் யாருக்கு எதிராக கப்பல் ஓட்டினார். இந்த புரிதல் கூட இல்லாதவர்கள், தமிழ்நாட்டை, தமிழ் உணர்வை எப்படி புரிந்துகொள்வார்கள். இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Tags

Next Story
டெய்லியும் நீங்க வெவ்வேற டைம்ல தூங்குனா என்ன ஆகும் தெரியுமா..?