பதிவு செய்யப்பட்ட பழைய ஆவணங்களின் நகல் பெறும் வசதியை தொடங்கி வைத்த ஸ்டாலின்
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல் பெறும் வசதியை தொடங்கி வைத்த ஸ்டாலின்
வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.
இதில் ஈரோடு மாநில வரிக் கோட்டத்திற்குட்பட்ட இணை ஆணையர் வரி விதிப்பு மற்றும் நுண்ணறிவு கோட்ட அலுவலகம், சேவை மற்றும் சரக்கு வரி மேல் முறையீட்டு அலுவலகம், உதவி ஆணையர், திண்டல், பெருந்துறை மற்றும் சென்னிமலை வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 6 அலுவலகங் களுக்கு ஈரோட்டில் அலுவலகக் கட்டிடம், சத்தியமங்கலம், கோபிச் செட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துறையூர், புதுக்கோட்டையில் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துணை ஆணையர், தூத்துக்குடி சரக அலுவலகம், உதவி ஆணையர், தூத்துக்குடி-1, 2 மற்றும் 3 ஆகிய வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்களுக்கு தூத்துக்குடியில் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை கட்டடங்களை திறந்து வைத்தார்.
அரகண்டநல்லூரில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவிலும், பழனி பதிவு மாவட்டத்தில், சத்திரப்பட்டி யில், 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை இணைய வழியாக பெறும் சேவையையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பதிவுத்துறை தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்கள் தற்போது ஒளிவருடல் செய்யப்பட்டு மையக் கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. சொத்து தொடர்பான (உயில், டிரஸ்ட், இதர ஆவணங்களை தவிர்த்து) எந்த ஆவணத்திற்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும், தேவையான கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தி பொதுமக்கள் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒளிவருடல் செய்யப் பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கும், அதிவிரைவாக மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஏதுவாக, அதிவிரைவு சேமிப்பு கலன்கள் 31 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு ஆவண நகல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்கள் https://tnreginet.gov.in என்ற இணையவழியாக பெறும் சேவையினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
உயில், டிரஸ்ட் ஆவணங்களின் நகல்கள் சரியான நபருக்கு அவரின் அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பொதுமக்கள் சொத்து தொடர்பான எந்த ஒரு சான்றிட்ட நகலுக்காகவும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. 1865-ம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் நகல்கள் உலகின் எந்த மூலையில் உள்ள பொது மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவுத்துறையின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தற்போதுள்ள மூன்று இணையநெறிமுறை புகைப்படக்கருவிகளுடன், 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சார்பதிவகங்களில் உள்ள பதிவறைகளில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு இணைய நெறி முறை புகைப்படக் கருவிகளின் பயன்பாட்டினையும் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் முனைவர் ஜகந்நாதன், பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu