ஸ்டாலின் கையில் குச்சி: நாஞ்சில் மனோகரன் ஸ்டைல்?

ஸ்டாலின் கையில் குச்சி: நாஞ்சில் மனோகரன் ஸ்டைல்?
X

கையில் குச்சியுடன் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் 

முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி செல்லும்போது கையில் வைத்திருந்த குச்சியைப் பார்த்து நாஞ்சில் மனோகரன் வைத்திருந்த குச்சியுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்

முதலமைச்சர் ஸ்டாலின் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நாள்தோறும் உடற்பயிற்சி செய்பவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம், லாங் சைக்கிளிங் செய்வார். உடற்பயிற்சி கூடங்களில் கடுமையாக வொர்க் அவுட் செய்வார். தினமும் காலையில் நடைபயிற்சி செல்வார்.

சென்னை அடையாறில் உள்ள தியோசஃபிகல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், அண்மையில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில், நடைபயிற்சி மேற்கொண்டார். முதல்வர் நடைபயிற்சி செல்வதைப் பார்த்த அங்கே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து முதல்வர் ஸ்டாலினிடம் சென்று பேசினார்கள். மேலும் ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் கையில் ஒரு குச்சி இருந்தது. அந்த குச்சியைப் பார்த்த பலரும், அது என்ன குச்சி என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சிலர் அது ஒரு வகையான மருத்துவக் குச்சி என்று கூறுகிறார்கள். சிலர், இது போன்ற குச்சிகள் அக்குபிரஷர் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். இந்த குச்சி கருங்காலி மரத்தால் செய்யப்படுகிறது என்றும் இது மருத்துவ குணங்கள் கொண்டது என்றும் கூறுகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதையும் முதல்வர் ஸ்டாலின் கடைபிடிப்பவர் என்பதால், இந்த குச்சியைக் கையில் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில், முதலமைச்சர் வைத்திருக்கும் இந்த குச்சி பற்றி சிலர் அரசியல் ரீதியாகவும் கருத்து கூறுகிறார்கள். தி.மு.க முன்னாள் அமைச்சரும் கட்சியின் முன்னாள் பொருளாளருமான நாஞ்சில் மனோகரன் கையில் குச்சி வைத்திருந்ததை நினைவு கூர்ந்து, ஸ்டாலின் நாஞ்சில் மனோகரன் பாணியைக் கடைபிடிக்கிறாரா என்றும் கேட்டு வருகின்றனர்.

நாஞ்சில் மனோகரன் எப்போதும் கையில் ஒரு குச்சி வைத்திருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த காரணத்திற்காக அவரை அப்போது மந்திரக்கோல் மைனர் என விமர்சித்தார்கள். ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் குச்சியும் கிட்டத்தட்ட அதே போன்ற தோற்றம் கொடுக்கிறது. ஆனாலும், ஸ்டாலின் என்ன காரணத்திற்காக இந்த குச்சியைக் கையில் வைத்திருக்கிறார் என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!