யூபிஎஸ்சி தேர்வில் கோவையின் ஸ்வாதி ஸ்ரீ 42வது இடம்: ஸ்டாலின் வாழ்த்து
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில், ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள், முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன.
2021ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சிதேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். முதலிடம் பெற்றது குறித்து ஸ்ருதி சர்மா கூறும்போது, ''தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது இடத்தை அங்கிதா அகர்வால் என்பவரும், 3வது இடத்தை காமினி சிங்லா என்ற பெண்ணும் 4வது இடத்தை, ஐஸ்வர்யா வர்மா என்ற தேர்வரும் பெற்றுள்ளனர். இதில், கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ என்ற மாணவி, இந்திய அளவில் 42வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.
கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் - லட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஸ்வாதிஸ்ரீ, 25. இளங்கலை வேளாண் பட்டதாரி. வேளாண் கல்வி மீது பள்ளி பருவத்தில் இருந்தே ஆர்வம் கொண்டவர்.
இந்த நிலையில், யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் ட்விட்டர் பதிவில் "யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்காகப் பணியாற்றவுள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்! சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள்! வெற்றி பெறாதவர்களுக்கு வெற்றிக்கனி எட்டும் தொலைவில்தான் உள்ளது!" என்று பதிவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu