கருணாநிதி பிறந்த நாளில் 500 மதுக் கடைகளாவது மூடுங்க.. அன்புமணி

கருணாநிதி பிறந்த நாளில் 500 மதுக் கடைகளாவது மூடுங்க.. அன்புமணி
X

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ். (கோப்பு படம்).

கருணாநிதி பிறந்த நாளில் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதி பிறந்த நாளில் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடவேண்டும் என பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்பின் இன்றுடன் 53 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை 500 மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதை தமிழக அரசு அறிவிக்கவில்லை. அறிவிக்கப்பட்டவாறு மதுக்கடைகள் மூடப்படுமா... மூடப்படாதா? என்பது மர்மமாகவே இருக்கிறது.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு மதுக்கடைகள் மூடப்படாதது ஏன்? என்று வினாக்கள் எழுப்பப்படும் போதெல்லாம், அரசுத் தரப்பிலிருந்து மனநிறைவு அளிக்கும் வகையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்ற ஒற்றை பதிலையே மீண்டும், மீண்டும் கூறி தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது. மதுக்கடைகளை மூடுவதில் கால தாமதம் ஏற்படுவதற்கு கணக்கெடுப்பு தான் காரணம் என்பதை ஏற்க முடியாது. 5 மணி நேரத்தில் தயாரிக்கப்பட வேண்டிய பட்டியலை 53 நாட்களாகியும் தமிழக அரசால் தயாரிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது; அதனால் தான் தமிழ்நாட்டில் மது வணிகமும் அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தையும் கடந்து மது வணிகம் செய்வது மக்கள் நல அரசின் பணி அல்ல; மதுவின் தீமைகளில் இருந்து மக்களைக் காப்பது தான் மக்கள் நல அரசின் கடமை ஆகும். இதை தமிழ்நாடு அரசு உணர்ந்து அதன் மதுவிலக்குக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கிற்கான நல்லத் தொடக்கத்தை வகுக்க முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி சிறந்த நாள் வாய்க்காது. எனவே, கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளான இன்று, ஏற்கனவே வெளியிடப்பட்ட 100 மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும். அவை தவிர மீதமுள்ள 4829 மதுக்கடைகளையும் கலைஞரின் நூற்றாண்டில் படிப்படியாக மூடி, 2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்:

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிஷா மாநிலம், பாலாசூர் மாவட்டத்தில் சென்னை கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி உள்ளிட்ட மூன்று தொடர்வண்டிகள் உள்ளிட்ட 3 தொடர்வண்டிகள் ஒரே இடத்தில் தடம் புரண்டு மோதிக்கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களில் 88 பேரும், காயமடைந்தவர்களின் 500-க்கு மேற்பட்டோரும் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்தவர்கள் என்பது கூடுதல் துயரத்தை ஏற்படுத்துகிறது.

விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த அனைவரும் உடல்நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

அறிவியலும், தொழில்நுட்பமும் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் முதல் விபத்து நடந்த பிறகு அடுத்தடுத்து மேலும் இரு தொடர்வண்டிகள் செல்ல எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings