முனைவர் க. இராமசாமிக்கு செம்மொழித் தமிழ் விருது: முதல்வர் வழங்கல்

முனைவர் க. இராமசாமிக்கு செம்மொழித் தமிழ் விருது: முதல்வர் வழங்கல்
X

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் க. இராமசாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கௌரவித்தார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் க. இராமசாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கௌரவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், 2023-ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் க. இராமசாமி அவர்களுக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும் தமிழக முதல்வர் வழங்கிக் கௌரவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் அவர்களின் கனவினை நிறைவேற்ற, நடுவண் அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில், 2006-இல் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்து மறைந்த முதல்வர் கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை'யை நிறுவினார்.

இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் 'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' வழங்கப்படுகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையும் அடங்கியதாகும்.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

அறக்கட்டளை தொடங்கப்பட்டபின் 2009ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா அவர்களுக்கு 2010, ஜூன் 23 அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் 2010-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டன. மேலும், 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை 22.08.2023 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, 2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அமைக்கப்பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் முனைவர் க. இராமசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநரும், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலருமான முனைவர் க. இராமசாமி அவர்களுக்குக் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கிக் கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும், பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும், மணிமேகலை வழக்குச் சொல்லகராதி, சங்க இலக்கியத்தில் கடல் வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றங்களும் ஆகிய நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil