ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்: சென்னையில் பரபரப்பு
பைல் படம்.
சென்னையில் பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரின் உருவச்சிலைக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரின் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனிடையே சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் அதிமுகவினர் பெரியார் பிறந்தநாளையொட்டி, அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்த வந்தனர்.
இந்நிலையில் பெரியார் சிலைக்கு கீழே பெரியார் படத்தை வைத்து ஓபிஎஸ் அணியினர் மரியாதை செலுத்தினர். பின்னர் வந்த எடப்பாடி பழனிசாமி அணியினர், ஓபிஎஸ் அணியினர் வைத்த பெரியார் படத்துக்கு நாங்கள் மரியாதை செலுத்த மாட்டோம் எனக் கூறி, சிலையின் மற்றொரு புறத்தில் இன்னொரு பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில், ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இன்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் மோதல் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu