கரூர் மாவட்ட ஆட்சியருக்கு தலைமை செயலர் பாராட்டு

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு தலைமை செயலர் பாராட்டு
X

மனு அளித்த ஒரு மணி நேரத்தில் மாற்றுத் திறனாளி குடும்பத்துக்கு அரசு தொகுப்பு வீட்டுக்கான ஆணையை வழங்குகிறார் ஆட்சியர் பிரபு சங்கர்.

ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கிய ஆட்சியரை தலைமைச் செயலர் பாராட்டியுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கரூரைச் சேர்ந்த சந்திரா என்ற பெண்மணி தனது 29 வயது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கணவனால் கைவிடப்பட்ட தான், தனது வாய் பேச முடியாத கைகள் இயங்காத 29 வயது மகனுடன் வசித்து வருவதாகவும் மகனின் நிலையால் வாடகை வீடு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் எனவே அரசு குடியிருப்பில் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்த ஆட்சியர் பிரபு சங்கர் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் வீடு ஒன்றை ஒதுக்கி அதற்கான ஆணையை உடனடியாக அந்தப் பெண்மணியிடம் ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தை அழைத்து சென்று அரசு ஒதுக்கிய குடியிருப்பில் குடியிருக்க வைத்தனர். மனு அளித்த ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு அரசு குடியிருப்பு வழங்கியதை அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் இது குறித்து அலுவல் ரீதியாக அறிந்து கொண்ட தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மனு அளித்த ஒரு மணி நேரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கி ஆதரவற்ற அந்த பெண்ணுக்கும், மாற்றுத்திறனாளி மகனுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்களது நிர்வாகப் பணியை பாராட்டுகிறேன். உங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என அந்த கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!