அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு
X

தலைமைச் செயலாளர் இறையன்பு. (கோப்பு படம்).

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சிறந்த எழுத்தாளரான இறையன்பு தமிழ் மொழிக்கும், எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு உத்தரவு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிறது இதைத்தவிர மக்கள் தொடர்பு முகாம்களும் மாதத்திற்கு ஒன்று என நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களின் போது மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் வரிசையில் நின்று தான் தங்கள் மனுக்களை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் நடக்க இயலாதவர்களும் வயதானவர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவதை பார்க்க நேரிடுகிறது. சில மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளிடம் முன்கூட்டியே மனுக்களை பெற்று அவர்களை அனுப்பி விடுவதாக தெரிகிறது.

மனு அளிப்பவரை அனுப்ப அவருடைய மனுவை பரிசீலித்து அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் விளக்கத்தை கொடுத்தால் தான் அவர்கள் குறைதீர்க்கப்படும் என்கிற அன்போடு தங்கள் இல்லத்திற்கு திரும்பிச் செல்வார்கள். அதை அடையும் வகையில் குறைதீர்க்கும் நாளன்று குறிப்பிட்ட இடத்தை அதிக வயது முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி அவர்களை அமரச் செய்ய வேண்டுகிறேன்.

மேலும், முதியவர்களிடத்திலும், மாற்றுத்திறனாளிகளிடமும் இருந்து முதலிலேயே மனுக்களை பெற்று தீர்வு சொல்லி அனுப்புவதும் பயனுள்ள செயலாக அமையும் என்று கருதுகிறேன். இந்த நடைமுறையை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!