இயற்கை பேரிடரில் முதல்வர் ஸ்டாலின் முகம் தத்ரூபம்.. வைரலாகும் படங்கள்
பேரிடரில் தெரியும் படமும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உண்மையான படமும்.
வடகிழக்கு பருவமழையொட்டி தமிழகம் முழுவதும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் சில இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வங்கக்கடலில் நேற்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ளஇந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னையில் அக்டோபர் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மஞ்சள் நிற எச்சரிக்கை என்பது கனமழை எனவும், இது 7 முதல் 11 செ.மீ மழை பொழிவு இருக்கும். ஆரஞ்சு நிற எச்சரிக்கை என்பது மிக கனமழை எனவும், 12 முதல் 20 செ.மீ மழைப்பொழிவை குறிப்பதாகும். சிவப்பு நிற அலர்ட் என்பது அதீத கனமழை எனவும், 20 செ.மீக்கும் மேலே மழைப்பொழிவு ஏற்படும்.
பருவ மழையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பேரிடர் மீட்புக் குழு தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல நாட்களாகவே அந்தந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்தது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும், 15 செயற்பொறியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவர்கள் அனைவரும் மண்டல கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வாா்கள் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மீட்புப் பணிக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் பொருட்களும் தயாா் நிலையில் இருப்பதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்த பணிபுரிய ஆலோசனை வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில் சென்னை மாநகரவாசிகள் பெரும் இழப்பை சந்தித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களின் குடும்பம் மற்றும் பைக் மற்றும் கார்களை பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மக்கள் தங்களின் கார்களை வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் இருக்க மேம்பாலங்களில் இருபுறமும் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த செயல் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மாநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் கொதித்தெழுந்த கார் உரிமையாளர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கனமழையில் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சமூக வலைத்தளங்களிலும் கனமழை குறித்த டிப்சுகளை நெட்டீசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நெட்டீசன்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவு ஒன்றில், வெள்ளக்காடாய் மாறிய சாலையில் கார்கள் ஊர்ந்து செல்வது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து சென்னை மக்களே உஷார் என பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஒன்று மனித முகம் தெரியும்படி, குறிப்பாக சொல்லப்போனால் ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்’ முகம் தெரியும் அளவிற்கு தத்ரூபமாக இருப்பது நெட்டீசன்களை கவர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் மிச்சாங் சூறாவளி ஏற்படுத்திய அழிவு, நகரத்தை முன்னோடியில்லாத வகையில் வெள்ளத்தில் மூழ்கடித்து, நகர்ப்புற வாழ்க்கையை சீர்குலைத்து, நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. அதன் வெள்ள பாதிப்பு பகுதிகளின் படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன. அந்த படங்களில் ஒன்றுதான் ஸ்டாலின் படத்தை போன்று காட்சியளித்தது.
இந்த படத்தை பார்த்த நெட்டீசன்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு நெட்டீசன் ஒருவர், ‘‘இது மனித முகம் போல..’’ எனவும், மற்றொருவர் ‘‘இது ஸ்டாலின் முகம் போல்’’ எனவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu